மனித உடல் அமைப்பு மற்றும் இயக்கம்

0
71

மனித உடல் அமைப்பு மற்றும்  இயக்கம்

 • அனைத்து உயிரினங்களும் சிறப்பான உடல் அமைப்பினைப் பெற்றுள்ளன. மனித உடல் குறிப்பிட்ட வடிவம் மற்றும் செயல்பாடுகளுடன் கூடிய சிறப்பு அமைப்பைப் பெற்றுள்ளது. அனைத்து உறுப்புகளும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து செயல் புரிகின்றன.
 • தோல் நமது உடலின் மிக கனமான உறுப்பாகும். நம் உடல் எடையில் ஏறக்குறைய 7 கிலோ தோல் உள்ளது.

மனித
உறுப்பு
மண்டலத்தின்
அமைப்பு/செயல்பாடுகள் :

தோலுறுப்பு மண்டலம் :

தோலுறுப்பு
மண்டலத்தில் தோல், உரோமம், நகம், வியர்வைச் சுரப்பிகள்,எண்ணெய்ச் சுரப்பிகள் போன்றவை உள்ளன.

பணிகள் :

 • உடலின் உள்உறுப்புகளைப் பாதுகாக்கிறது.
 • வியர்வையைச் சுரப்பதன் மூலம் இம்மண்டலம் ஒரு கழிவுநீக்க உறுப்பாகச் செயல்படுகிறது. 
 • ஓர் உணர் உறுப்பாகச் செயல்படுகிறது.
 • வைட்டமின் D யைத் தயாரிக்க உதவுகிறது.

செரிமான மண்டலம் :

செரிமான
மண்டலத்தில் வாய், உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், சிறுகுடல், சுரப்பிகள் உள்ளன.

பணிகள் :

 • பல வகையான உணவுப் பொருள்களின் செரித்தல் இங்கு நடைபெறுகின்றன.
 • செரிக்கப்பட்ட உணவு மூலக்கூறுகள் உறிஞ்சப்பட்டு இரத்தத்தின் மூலம் கடத்தப்படுகிறது.
 • செரிக்கப்படாத உணவு கழிவாக வெளியேற்றப்படுகிறது.

சுவாச மண்டலம் :

அனைத்து
உயிரினங்களும் உயிர்வாழ சுவாசம் அவசியம். உணவு உயிர்வளி, நொதிகள் உதவியினால் எரிக்கப்பட்டு (சிதைக்கப்பட்டு) எளிய பொருள்களாக மாற்றம் அடைகின்றன. இந்த நிகழ்ச்சியே சுவாசித்தல் எனப்படும்.

பணிகள் :

 • நுரையீரல் சுற்றுப்புறத்திலிருந்து உயிர்வளியை எடுத்துக் கொண்டு திசுக்களுக்கு இரத்த ஓட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளுக்குக் உயிர்வளி கடத்தப்படுகிறது (உட்சுவாசம்).
 • உணவுப்பொருள் எரிக்கப்படுவதற்கு உயிர்வளி பயன்படுகிறது. இவ்வினையின் போது தோன்றும் கரியமில வாயு நுரையீரல் மூலம் வெளியேற்றப்படுகிறது.
  (வெளிச்சுவாசம்).

எலும்பு மண்டலம் :

நமது உடலின் எலும்பு மண்டலத்தில் எலும்புகள், பிற திசுக்களாலான குருத்தெலும்புகள், தசை நார்கள் போன்றவை அமைந்துள்ளன. நமது உடலில் எலும்பு மண்டலத்தில் 206 எலும்புகள் உள்ளன. அனைத்து எலும்புகளும் மூட்டுகளால் இணைக்கப்பட்டு உடலிற்கு ஒரு வடிவத்தைத் தருகிறது.

பணிகள் :

 • எலும்பு மண்டலம் நமது உடலிற்கு வடிவத்தை அளிப்பதோடு, இயக்கத்திற்கும் உதவுகிறது.
 • உள்ளுறுப்புகளான மூளை, இதயம், நுரையீரல் போன்றவற்றைப் பாதுகாக்கின்றது.
 • இரத்த வெள்ளையணுக்கள், இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுகள் போன்றவை எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப்படுகின்றன.

தசை மண்டலம் :

தசை மண்டலத்தில் மூன்று வகையான தசைகள் உள்ளன. அவை எலும்புத் தசைகள் (வரியுடைத் தசைகள்), மென் தசைகள் (வரியற்ற தசைகள்), இதயத்தசைகள்.

எலும்புத்தசைகள் என்பது எலும்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மென்தசைகள் என்பது இரத்தக் குழாய்களின் சுவர்களிலும், உள்ளீடற்ற உறுப்புகளான இரைப்பை, குடல் போன்றவற்றின் சுவர்களிலும் காணப்படுகின்றன. இதயத் தசைகள் என்பது இதயத்தில் மட்டுமே காணப்படும் ஒரு சிறப்பான தசையாகும்.

பணிகள் :

 • எலும்புத் தசைகள் உடலுக்கு உருவத்தை அளிக்கின்றன. மேலும் நம் உடல் உறுப்புகள் இயங்குவதற்க்கும் உதவுகின்றன.
 • நம் உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக் கொள்ளத் தேவையான வெப்பத்தை உற்பத்தி செய்பவை தசைகளே ஆகும்.
 • பிற தசைகள் உள்ளுறுப்புகளின் இயக்கத்திற்கு உதவுகின்றன.
 • நம்முடைய முகம் காட்டும் பல்வேறு உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கு,
  40 வகையான தசைகளின் செயல்பாடே காரணம் ஆகும்.

இரத்த ஓட்ட மண்டலம் :                  

உடலின் பல பகுதிகளுக்குத் தேவையான பொருள்களை இரத்தத்தின் மூலம் கடத்தும் பணியைச் செய்வது, இரத்த ஓட்ட மண்டலம். இம்மண்டலம் இதயம் மற்றும் இரத்தக் குழாய்களால் ஆனது. இதன் வழியாக இரத்தம் செல்கிறது.

இதயம், தசை நார்களால் ஆன சுருங்கி விரியும் தன்மையுடைய ஓர் உறுப்பாகும். இதயம் இரத்தத்தை அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்கிறது. மீண்டும் அவை அனைத்து பாகங்களிலிருந்தும் இரத்தத்தைப் பெறுகிறது.

பணிகள் :

 • இரத்தமானது, உணவூட்டப் பொருள்கள், உயிர்வளி, கழிவுப் பொருள்கள், ஹார்மோன்களைக் கடத்துகின்றது. உடலின் வெப்பநிலையையும், நீரின் அளவையும் கட்டுப்படுத்துகின்றது.

நரம்பு மண்டலம் :

 • மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகளால் ஆனதே நரம்பு மண்டலம். நரம்பு மண்டலம் இருவகைப்படும். அவை மைய நரம்புமண்டலம், வெளிப்புற நரம்பு மண்டலம். வெளி உலகத்தைத் தெரிந்து கொள்ள நம் உடலில் ஐந்து உணர்உறுப்புக்கள் உள்ளன. அவை கண், மூக்கு, காது, நாக்கு, தோல் ஆகியனவாம்.
 • மைய நரம்பு மண்டலம் மூளை, தண்டு வடத்தினால் ஆனது. வெளிப்புற நரம்பு மண்டலம் மூளை நரம்புகள், தண்டுவடநரம்புகளால் ஆனது.
இதையும் படிக்க:  TNUSRB PC Constable/ Taluk SI Exam Model Question Paper – Test 12

நாளமில்லா சுரப்பி மண்டலம் :

 • இம்மண்டலத்தில் நாளமில்லா சுரப்பிகளின் தொகுப்பு காணப்படுகிறது. இச்சுரப்பி சுரக்கும் வேதிப்பொருள்களே ஹார்மோன்கள். இரத்தத்தின் மூலம் அவை செயல்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஹார்மோன்கள் உடற் செயலியல் வேலைகளை ஒழுங்குபடுத்துகின்றன.

கழிவு நீக்க மண்டலம் :

 • கழிவுப் பொருள்களை வெளியேற்ற உதவும் மண்டலமே கழிவு நீக்க மண்டலம் ஆகும். இதில் ஒரு ஜோடி சிறுநீரகம், ஒரு ஜோடி சிறுநீர்நாளம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்புறவழி அமையப்பெற்றுள்ளது. இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் வடிகட்டப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் சிறுநீராக வெளியேற்றுவதே இதன் பணியாகும்.

இனப்பெருக்க மண்டலம் :

 • ஆண்களில் காணப்படும் விந்தகங்கள் மற்றும் பெண்களில் காணப்படும் அண்டகங்கள் உள்ளடங்கியதே இனப்பெருக்க மண்டலமாகும். விந்தகம் உற்பத்தி செய்யும் ஆண் இனச்செல்லுக்கு விந்துசெல் என்று பெயர். அண்டகம் உற்பத்தி செய்யும் பெண் இனச்செல்லுக்கு அண்டசெல் என்று பெயர். இம்மண்டலத்தின் பணி புதிய இனங்களை இனவிருத்தி செய்து மனித இனத்தை நிலை நிறுத்திக் கொள்வதே ஆகும்.

இந்திய மருத்துவத்தில் மனித உடல் நலம் பேணல் :

ஆரோக்கியமான வாய்வு என்பது நோய்களைத் தடுப்பதும் சிகிச்சை அளிப்பதும் ஆகும். பெரும்பான்மையான கிராம மக்கள் இரண்டு வகையான சிகிச்சையைச் சார்ந்திருக்கிறார்கள்.
அவை சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என்பவையாகும்.

சித்த மருத்துவம் (தமிழ் மருத்துவம்) :

 • சித்த மருத்துவம் என்பது நம் தமிழ்நாட்டில் தோன்றிய மிகத் தொன்மையான தமிழர் மருத்துவ முறை ஆகும். பழங்கால இலக்கியங்களான திருமந்திரம், திருக்குறள், தொல்காப்பியம் முதலான நூல்களில் பல சித்த மருத்துவக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இது இங்கிருந்து பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்குப் பரவியது. பதினெட்டுச் சித்தர்கள் தான் இந்த மருத்துவ முறையை உருவாக்கினார்கள். சித்தர் என்பது ‘சித்தி’ என்ற சொல்லில் இருந்து தோன்றியதே ஆகும். இதன் பொருள் ‘முடிவற்ற பேரானந்தம்’ என்பதாகும்.
 • சித்தர்களில் அகத்தியரை முதல் சித்தர் எனக் குறிப்பிடுகிறோம். அவரைச் ‘சித்த மருத்துவத்தின் தந்தை’ எனவும் அழைக்கின்றோம்.
 • சித்தர்களின் பொதுவானடி கருத்து ‘உணவே மருந்து மருந்தே உணவு’ என்பதாகும். நம் வாடிநக்கை முறையும், உணவுப்பழக்கமும் நம் உடல்நலம் பேணுவதிலும் நோய்களைக் குணப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.
 • சித்தமருத்துவத்தில் தாவரங்கள் (மூலிகைகள்) உலோகக் கனிமம் (தாது) விலங்குப்பொருள்கள் (ஜீவன்) போன்றவற்றிலிருந்தே மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
 • சித்த மருந்து தயாரிக்க ஏறக்குறைய 1200 மூலிகைகள் பயன்படுகின்றன. சித்தர்களின் மருத்துவச் சிகிச்சை முறையில் முதலில் இலைகளைக் கொண்டும், பின்பு செடிகளின் வேர்களைக் கொண்டும் சிகிச்சையளிக்கப்படுகிறது.
 • நோய் தீவிரம் குறையாமல் இருந்தால் அதன் பின் தூள்(பஸ்பம்) என்ற அடுத்த நிலைக்குச் செல்கின்றார்கள். சூரணம், மாத்திரை, தைலம், லேகியம், ரசாயனம், பஸ்பம் மற்றும் செந்தூரம் போன்ற பல்வேறு மருந்து வடிவங்கள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆயுர்வேத மருத்துவம் :

 • ஆயுர்வேதம் என்பது இயற்கையான மூலிகை மருந்துகளால் குணப்படுத்தும் இந்தியாவில் தோன்றிய மிகப் பழைமையான சிகிச்சை முறையாகும். ஆயுர்வேதா என்பது உயிரைப் பற்றிய அறிவியலாகும். (ஆயுர்-உயிர், வேதம்-அறிவியல்)
 • நமது உடல் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளால் ஆனது. இவற்றின் சமநிலையில் ஏற்படும் பாதிப்புகளைச் சீர்படுத்துவதே ஆயுர்வேதத்தின் நோக்கமாகும்.
 • இந்த முறையில் உடல், மனம் சார்ந்த வியாதிகளைக் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. யோகா, தியானம், தூய்மையாக்குதல் போன்ற அனைத்து முறைகளையும் பயன்படுத்திக் குணப்படுத்துவது ஆயுர்வேத சிகிச்சையின் சிறப்பம்சமாகும். இது வியப்படைய வைக்கும் ஒரு சிகிச்சை முறையாகக் கருதப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சை முறையில், நோயின் தன்மைக்கேற்ப மூலிகை மருந்துகள் கொண்டும், உடலைப் பிடித்து விடுதல் (மஸாஜ்), உணவுக் கட்டுப்பாடு செய்தல், உடற்பயிற்சிகள் செய்தல் எனப் பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஹோமியோபதி மருத்துவம் :

ஹோமியோபதி
என்பது ஒரு மாற்று மருத்துவ முறைகளுள் ஒன்றாகும். இதை ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவர் சாமுவெல் ஹானிமன் என்பவர் 1796இல் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார்.

யுனானி மருத்துவம் :

கிரேக்க
நாட்டின் ஹிப்போ கிரேட்டஸ் மற்றும் ரோமானிய நாட்டின் கேலன் என்பவர்களால் இப்பாரம்பரிய மருத்துவமுறை கண்டறியப்பட்டது. பிறகு அரபு மற்றும் பெர்சிய நாடுகளில் இம்மருத்துவ முறை வளர்ச்சி அடைந்தது.

இதையும் படிக்க:  சில முக்கிய அறிவியல் கருவிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்

நோய்கள், குறைபாடுகள் மற்றும் தடுப்பு முறைகள் :

நீரிழிவுநோய் :

நாம் சாப்பிடும் உணவு உடைந்து குளுக்கோசாக மாறுகிறது. அனைத்து உயிரிகளுக்கும் தேவையான ஆற்றலை அளிக்கும் மூலமாகக் குளுக்கோஸ் உள்ளது. கணையத்தில் சுரக்கப்படும் இன்சுலின் என்ற ஹார்மோன், குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு 80-120 மி.கி/டெலியை விட அதிகமானால், அந்த மனிதனுக்கு நீரிழிவுநோய் உள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம். நீரிழிவு என்பது நோய் அன்று. ஆனால் இது ஒரு குறைபாடாகும். இந்தக் குறைபாட்டிற்குக் காரணம், உடற்பயிற்சி இல்லாமை, முறையற்ற உணவுப்பழக்கம் மற்றும் இன்சுலின் பற்றாக்குறை போன்றவை ஆகும். நீரிழிவு நோயால் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், இதய நோய், போன்ற பிற நோய்களும் ஏற்படும்.

உடற்பயிற்சியின் நன்மைகள் :

மனிதர்களுக்கும் தேவையான ஒன்றாகும். உடற்பயிற்சி, நம் தசைகள், இதயம், நுரையீரல் மற்றும் இரத்த ஓட்ட மண்டலத்திற்கு உயிர்வளியை அளிக்கிறது. உடலுக்குப் போதுமான உயிர்வளியை கிடைக்கச் செய்வதே ஆரோக்கியத்தின் அறிகுறி ஆகும்.

சில முக்கிய உடற்பயிற்சிகள் :

 • மெதுவான ஓட்டம்
 • கூடைப்பந்து விளையாடுதல்
 • கால்பந்து விளையாடுதல்
 • நீந்துதல்
 • மிதிவண்டி ஓட்டுதல்
 • நீண்ட தூரம் வேக நடை
 • யோகா மற்றும் நடனம் ஆடுதல்
 • அனைவரும் நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல் வேண்டும். நாள்தோறும் குழந்தைகள் குறைந்தது 60 நிமிடங்கள் உடலை செயல்நிலையில் இருக்குமாறு விளையாட்டில் பங்கேற்க வேண்டும்.

உடற்பயிற்சியின் பயன்கள் :

 • உடற்பயிற்சி இதயத்தசைகள், நுரையீரல் உள்ளிட்ட உடலின் பல பாகங்களை வலிமைப்படுத்துகிறது.
 • இதன் மூலம் தேவையற்ற சக்தி(கலோரி) எரிக்கப்படுவதால் உடல் எடை சீராகிறது. உடல் பருமன் தடுக்கப்படுகிறது.
 • இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
 • இது இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
 • இது இரத்த அழுத்தத்தைச் சீராக்கி, நம் உடல் நலனை மேம்படுத்துகிறது.

உணவு பதப்படுத்துதல் :

பால் அல்லது இறைச்சியை ஒரு நாள் முழுவதும் திறந்து வைத்து விட்டு, மறுநாள் பார்த்தால் அவை கெட்டு போயிருக்கும். ஆனால், அரிசி அல்லது சர்க்கரையை அறை வெப்பநிலையில் வைத்திருக்கும் போது அவை கெடுவதில்லை. ஏன்? சில உணவு வகைகள் அறை வெப்பநிலைக்கே கெட்டுபோவதற்கு காரணம் அதில் உள்ள ஈரப்பதம் தான். அந்த வகையான உணவு வகைகள் அழுகும் பொருள்கள் எனப்படும். எ.கா. கனிகள், காய்கறிகள், பால், இறைச்சி. உணவுப் பொருள்கள் சில, அறைவெப்ப நிலையில் கெட்டுப்போகாமல் இருக்கும். ஏனெனில், அவை உலர்ந்து இருப்பதால் கெட்டுப் போவதில்லை. இந்த வகையான உணவுப் பொருள்கள் அழுகாத பொருள்கள் எனப்படும். எ.கா. அரிசி

உணவு கெட்டுப்போகாமல் வீணாவதிலிருந்து தடுப்பதற்குப் பலவகையானபதப்படுத்தும்
முறைகளைக் கையாளலாம். உறைகளில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட பால் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
பதப்படுத்துதலில் கையாளப்படும் பலவகையான முறைகளுள் சில தொன்மையானவை, சில புதிய அறிவியல் நுட்பங்களைக் கையாண்டும் பதப்படுத்தப்படுபவை.

உணவு பதப்படுத்துதல் என்றால் என்ன?

உணவுப் பொருள்களை நீண்ட நாள்களுக்கு கெட்டுப் போகாமல், வைத்திருக்கும் முறையே உணவுப் பதப்படுத்துதல் எனப்படும்.

பதப்படுத்துதலின் நோக்கம் :

உணவுப் பொருள்கள் வீணாவதைக் குறைத்தல். உணவுப் பொருள்களின் நிறம், சுவை மற்றும் ஊட்டப்பொருள்களை இயல்பான நிலையிலேயே வைத்திருத்தல். எல்லா காலங்களிலும் வருடம் முழுவதும் உணவுப் பொருள்கள் கிடைக்க வழி செய்தல். நம் உணவில் மேலும் ஒரு வகையைச் சேர்த்தல்.

பதப்படுத்துதலின் முறைகள் :

உணவுப் பொருள்களில் பாக்டீரியா, பூஞ்சை, சில நுண்ணுயிரிகள் வளர்ச்சியடையாமல் பாதுகாக்கும் முறையே பதப்படுத்துதல் என்பர். உணவுப்பொருள்களில் நொதிகளின் செயல்கள் கூட தடுக்கப்படவேண்டும். உணவு பதப்படுத்துதலில் பலவழிமுறைகள் உள்ளன. அவை உலர்த்துதல், குளிரூட்டுதல், வெப்பப்படுத்துதல், சர்க்கரை மற்றும் உப்பு கலத்தல். நவீன முறையான கதிர்வீச்சு முறையிலும் உணவு பதப்படுத்தப்படுகிறது. உணவு பதப்படுத்தும் வழிமுறைகளில் சிலவற்றைக் காண்போம்.

உலர்த்துதல் :

இம்முறையில் உணவிலுள்ள நீரை உலரவைத்து வெளியேற்ற வேண்டும். அறுவடை செய்த தானியங்களை சரியான முறையில் சூரிய ஒளியில் உலரவைத்து, அதனுள் இருக்கும் ஈரப்பதத்தை நீக்குகின்றனர். இதன் மூலம் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பூச்சிகள் தாக்குதலிலிருந்து உணவுப்பொருள்கள் பாதுகாக்கப்படுகின்றன.

வெப்பப்படுத்துதல் :

உணவு பதப்படுத்துதலில் இதுவும் ஓர் முறையாகும். உணவில் உள்ள நுண்ணுயிர்களை அழிப்பதுடன், இதில் உள்ள நொதிகளின் இயல்பையும் மாற்றுகின்ற முறை ஆகும். இதனால் உணவுப் பொருள் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகிறது.
(எ.கா.) பயன்படுத்தும் முன் அல்லது சேமிக்கும் முன் பாலைக் கொதிக்க வைத்தல். வெப்பப்படுத்துதலை நாம் எப்பொழுது நினைத்தாலும் நம்முன் தோன்றுவது பாஸ்டியர் பால் என்ற வார்த்தைதான். இம்முறையில் பாலை 70°c முதல் 75°c வெப்பநிலை வரை குறிப்பிட்ட நேரம் வரை காய்ச்சி, பின்பு வேகமாக குளிரச்செய்வது பாஸ்டியர் முறை எனப்படும். லூயிபாஸ்டியர் என்ற விஞ்ஞானி பாலைப் பாதுகாக்கும் இம்முறையைக் கண்டுபிடித்தார்.

இதையும் படிக்க:  TNPSC TAMIL QUESTIONS AND ANSWERS II

குளிரூட்டுதல் :

உணவுப் பொருட்களான இறைச்சி, மீன் போன்றவை மிகக் குறைந்த வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது நீரின் செயல் தடுக்கப்படுகிறது. அதனால் நுண்ணுயிர் வளர்ச்சியும், செயல்பாடும் தடைபடுகிறது.

உப்பு சேர்த்தல் ;

உணவுப் பொருள்களில் உப்பு சேர்ப்பதன் மூலம், உணவில் உள்ள நீரானது சவ்வூடுபரவல் நிகழ்ச்சி மூலம் வெளியேறுகிறது. உணவுப் பொருள்களில் ஈரப்பதம் இல்லையெனில் நுண்ணுயிர்கள் வளர முடியாது. நொதிகள் செயல் புரிய முடியாது. சில உணவுகள், இறைச்சி, மீன், நெல்லிக்காய், புளி, மாங்காய், எலுமிச்சை போன்றவை உப்பு சேர்த்தல் மூலம் பதப்படுத்தப்படுகின்றன.

சர்க்கரை சேர்த்தல் :

உணவுப்பொருள்களில் சர்க்கரையைச் சேர்ப்பதன் மூலம், சர்க்கரை நீரில் கரைந்து அவ்வுணவுப்பொருள்களில்
நீரற்ற நிலையை உண்டாக்கும். நீரில்லை என்றால் நுண்ணுயிரிகள் வளரா. எனவே, உணவுப்பொருள் பாதுகாக்கப்படுகிறது.
உணவுப் பொருள்களில் சர்க்கரை சேர்ப்பதால் உணவு வீணாவது தடுக்கப்பட்டுச் சேமிக்கப்படுகிறது என்பதைவிடப் புது உணவு வகைகளான பழத்துவையல், பழப்பாகு, பழரசம் போன்றவை உருவாகவும் காரணமாக உள்ளது.

பல்வேறு
காரணங்களால் துரித உணவு இன்றைக்கு அனைவராலும் விரும்பப்படுகிறது. துரித உணவு என்பது குறைந்த நேரத்தில் சமைக்கக்கூடிய ஓர் எளிய வசதியான உணவாகும். இதன் சுவை மற்றும் வாசனை அனைவராலும் பாராட்டப் படுகின்றது. இன்றைய உணவு என்பது வீட்டிலேயே முழுமையாகச் சமைக்கப்பட்ட உணவு அன்று. தீங்கு விளைவிக்கும் என அறிந்திருந்தாலும், பதப்படுத்தப்பட்ட அல்லது பதப்படுத்திகள் சேர்க்கப்பட்ட உணவையே இன்று பெரும்பான்மையானோர் தம் வீட்டில் உபயோகப்படுத்துகின்றனர்.

துரித உணவை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு உடல் பருமன் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் தாக்க வாய்ப்புண்டு. துரித உணவு என்பதில், பலதரப்பட்ட பொருட்களால் ஆன பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் தயார் நிலையில் உள்ள உணவு, பர்கர்கள், வடை, சமோசா, பஜ்ஜி மற்றும் பொரித்த உணவுகள் போன்றவை இதில் அடங்கும். இந்த உணவுகள் உடல் நலத்திற்கு ஏற்றதன்று. மேலும் வீட்டில் சமைக்கும் ஆரோக்கியமான உணவில் இருக்கும் ஊட்டப்பொருள்கள், வைட்டமின்கள் போன்றவை இவற்றில் கிடைப்பதில்லை. பீஸ்ஸா, பாஸ்டா, பர்கர், நூடுல்ஸ், பஜ்ஜி, சமோசா போன்ற உணவுகளில் சுவை அதிகம். ஆனால் ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைவு. எனவே, உடலுக்கு எந்தவிதத்திலும் பயன் கிடையாது.

துரித உணவைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது, ஒரு மனிதனின் உடல்நலனில் பல ஆபத்தான விளைவுகள் தோன்றலாம். பல குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் வருமானம் ஈட்டும்போது, பாரம்பரியமான முறையில் புதிய பச்சையான உணவு பொருள்களைக் கொண்டு சமைக்க நேரம் மற்றும் ஆற்றல் இல்லையென்பது உண்மையாகும்.

துரித உணவின் தீய விளைவுகள் :

துரித உணவில் மிக அதிக அளவு ஆற்றல் செறிவு உண்டு. துரித உணவில் உள்ள அதிக ஆற்றல் செறிவு மூளையின் கட்டுப்படுத்தும் திறனைக் குறைக்கிறது. தொடர்ந்து, துரித உணவு சாப்பிடுவதால் உடல் எடை கூடுதலும், உடல் பருமனும் ஏற்படும். ஏனெனில் துரித உணவு உடலில் பசிக் கட்டுப்பாட்டு மையத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். பசியின் போது, குறைந்த ஆற்றல் செறிவுகொண்ட உணவை ஏற்றுக் கொள்ளும்படியாக மனித உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிக ஆற்றல் செறிவு கொண்ட உணவை ஏற்றுக்கொள்ள நம் உடல் வடிவமைக்கப்படவில்லை.
துரித உணவு இரத்தக் குழாய்களில் இரத்த ஓட்டத்தை தடைசெய்கிறது, அதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. துரித உணவுகளில் மிக அதிக அளவு கரையும் கொழுப்புகளும், தரம் குறைந்த கார்போஹைட்ரேட்டுகளும்,
அதிக அளவு சோடா உப்பும் உள்ளன.

நமது உடலுக்கு நார்ச்சத்தும், ஆரோக்கியமான கொழுப்பு வகைகளும் தேவைப்படுகின்றன. ஆரோக்கியமான உடல் நலத்திற்கு எதிராக துரித உணவு மனித உணவு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here